

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர், இளம்பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் துறையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான தண்டனை கடுமையாக்கப்படும் என அண்மையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காவலர்கள் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் தன் தாயுடன் காய்கறிகள் ஏற்றப்பட்ட வண்டியில் திருவண்ணாமலை காய்கறிச் சந்தைக்குக் கடந்த வாரம் வந்தார். ஊருக்குத் திரும்பும் வழியில் ஏந்தல் கிராமத்தின் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், வாகனத்தில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இறக்கி, அருகில் இருந்த மறைவான பகுதிக்குக் கொண்டுசென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டுத் தப்பியோடினர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்ட கிராம மக்கள், அரசு மருத்துவமனைக்குச் செல்ல உதவினர். மருத்துவர்கள் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. மக்களுக்கு அரணாக இருந்து அவர்களைக் காக்க வேண்டிய காவல் துறையினரே பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் பாலியல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து வழக்கைத் திசைதிருப்புவதும் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல.
திருவண்ணாமலை ரீட்டா மேரி காவல் நிலையக் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கு (2001), வாச்சாத்தி கிராமப் பெண்களுக்கு எதிராகக் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரும் நிகழ்த்திய பாலியல் வல்லுறவு வழக்கு, சிதம்பரம் பத்மினி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடங்கிக் காவல் துறையினரில் சிலர் கூட்டாகவும் தனியாகவும் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
காவல் துறையில் பணிபுரியும் பெண்களும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் செய்திகள் வெளியாகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது பெண் காவல் அதிகாரி ஒருவரிடம் காவல் உயரதிகாரி ஒருவரே முறைதவறி நடந்துகொண்ட சம்பவம் உள்ளிட்ட வழக்குகளை உதாரணமாகச் சொல்ல முடியும். காவல் துறை மீது மக்கள் மத்தியில் இருக்கும் அச்சவுணர்வைக் காவலர்களில் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது கடும் கண்டனத்துக்கு உரியது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்களில் காவல் துறையினர் ஈடுபட்டால் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் என 2025 ஜனவரியில் தமிழ்நாடு அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. ஆனால், சட்டங்கள் கடுமையாக்கப்படுவது குற்றங்களைக் குறைக்கும் என்கிற நம்பிக்கையை அவ்வப்போது நடக்கும் பெண்களுக்கு எதிரான இது போன்ற அநீதிகள் குலைக்கின்றன. திருவண்ணாமலை பாலியல் வல்லுறவு வழக்கில் காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் இருவரையும் அரசமைப்புச் சட்டம் சட்டக்கூறு 311இன் அடிப்படையில் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு எதிரான பாலியல் வழக்கைப் போல் இந்த வழக்கிலும் விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டியது அவசியம். பெண்கள் அனைவரும் வீட்டிலும் பொதுவெளியிலும் பணியிடங்களிலும் பாதுகாப்புடன் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் காவல் துறையினர் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்கிற பெருமையைத் தமிழகம் தக்கவைத்துக்கொள்ள இது போன்ற நடவடிக்கைகள் அவசியம்!