கரூர் துயரம்: அலட்சியத்துக்குக் கொடுத்த விலை
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகி இருப்பது, தமிழகத்தையே வேதனையிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு அரசியலில் நுழைந்த நடிகர் விஜய், ‘ரோடு ஷோ’ வடிவிலான பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெரிசல் ஏற்பட்டு இதுவரை 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 9 பேர் குழந்தைகள்; 18 பேர் பெண்கள். காயமடைந்த ஏறக்குறைய 60 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
த.வெ.க.வின் தவறான திட்டமிடல் இந்த விபரீதத்துக்கு முதல் காரணம் என்கிற விமர்சனத்தைப் புறக்கணிக்க முடியாது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை 10.30 மணிக்கு மக்களிடையே பேசக் காவல் துறை விஜய்க்கு அனுமதி அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் இரவு 7.15 மணிக்குத்தான் அங்கு வந்தார். வழிநெடுகிலும் இருந்த மக்கள் கூட்டத்தைத் தாண்டி அவர் நிகழ்விடத்துக்கு வந்துசேரப் பல மணி நேரம் ஆனது.
ஏறக்குறைய நண்பகல் 12 மணியிலிருந்தே அவருக்காகத் தொண்டர்கள் குழந்தைகளோடு காத்திருந்தனர். நீண்ட நேரக் காத்திருப்பால் நீர்ச்சத்து இழப்புக்கு உள்ளாகியிருந்த பலர், விஜய்யின் பிரத்யேக வேன் வந்தபோது நெரிசல் அதிகரித்து கீழே விழுந்து மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர் என்றும், பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புக்கு அது ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
விஜய் அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். நெரிசலால் இறந்தோர் எண்ணிக்கை துல்லியமாகத் தெரியாவிட்டாலும், அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்துகொண்ட விஜய்யோ, பிற நிர்வாகிகளோ அவற்றை அங்கேயே இருந்து எதிர்கொண்டிருக்க வேண்டும் என்கிற விமர்சனம் தவிர்க்க முடியாதது.
இந்தப் பரப்புரை தொடங்கிய திருச்சியிலேயே அசம்பாவிதம் நிகழ்வதற்கான அறிகுறிகள் தெரிந்தன. அதிலிருந்தாவது விஜய் தரப்பினர் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டிருக்கலாம். வழிநடத்த வேண்டிய விஜய் நிகழ்ச்சிக்கு மிகத் தாமதமாக வருவதும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குழந்தைகளும் பெண்களும் ஒரு நடிகராகத் தன்னை அதிகம் நேசிக்கும் சூழலில், இதுபோன்ற குறைபாடுகளை விஜய் தவிர்த்திருக்க வேண்டும்.
இறந்தவர்களுக்கும் காயமுற்றோருக்கும் மத்திய, மாநில அரசுகளோடு த.வெ.க.வும் இழப்பீடு அறிவித்துள்ளது. த.வெ.க. நிர்வாகிகள் 3 பேர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தை அரசு நியமித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலுக்குப் பின் சதி உள்ளது என்கிற குற்றச்சாட்டுடன் த.வெ.க. தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை அணுகியுள்ளது. குறுகலான பகுதியில் நிகழ்வு நடத்தக் காவல் துறை அனுமதி அளித்ததும் கூட்டத்தில் செருப்புவீச்சு நடத்தப்பட்டதும் உயிரிழந்தோர் உடல்கள் அன்றைய இரவிலேயே கூறாய்வு செய்யப்பட்டிருப்பதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
காவல் துறை தங்கள் நிகழ்ச்சிகளுக்குக் காலதாமதம் செய்யாமல் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என த.வெ.க. ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அரசியல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன் இத்தனை உயிரிழப்புகள் மூலம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்படி ஆனது பெருந்துயரமாகும்.
எதிர்காலத்தில் நெரிசல் மரணங்கள் நிகழாதபடி மத்திய, மாநில அரசுகள் விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அரசியல், பயணம், விளையாட்டு, ஆன்மிகம் என எதற்காகக் கூடினாலும், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக் கற்றுக்கொள்வதுதான் தற்போதைய தேவை.
