

சென்னை பட்டாபிராம் அருகே 14 வயதுச் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிறுமியின் சித்தப்பா வினோத் என்பவருக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 35 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் வேளையில், குற்றவாளிக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தாய், தந்தை இருவரும் தன்னுடன் இல்லாத நிலையில், சித்தி தனலட்சுமியின் வீட்டில் வசித்துவந்திருக்கிறார் அந்தச் சிறுமி. தன் அக்காள் மகளிடம் தன் கணவர் தகாத முறையில் நடந்துகொண்டதை அறிந்ததும், தன் கணவர் மீது காவல் துறையில் 2019இல் தனலட்சுமி புகார் அளித்தார். புகார் குறித்துச் சிறுமியையும் தனலட்சுமியையும் வினோத் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அந்தச் சிறுமி 2021இல் தற்கொலை செய்துகொண்டார்.