

பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்க பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முன்வந்திருக்கும் நிலையில், காசா மீதான இஸ்ரேலின் போர் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 2023 அக்டோபர் 7இல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக காசா மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல், இன்றுவரை தாக்குதலை நிறுத்தவில்லை. குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஏராளமான குழந்தைகள் உணவு, நிவாரண உதவிகள் கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலியப் பிணைக் கைதிகளை விடுவித்துவிட்டு, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரணடையும்வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் எச்சரித்திருக்கிறது. காசாவைக் கைப்பற்றுவதன் மூலம்தான் ஹமாஸ் அமைப்புக்கு முடிவுகட்ட முடியும் என்றும் இஸ்ரேல் கூறிவருகிறது. பாலஸ்தீனம் ஒரு தனிநாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை ஆயுதங்களைக் கைவிடப்போவதில்லை என்று ஹமாஸ் பதில் அளித்திருக்கிறது.