

‘போதைப்பொருள் இல்லாத இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவோம்’ என டெல்லியில் நடைபெற்ற போதைப்பொருள் கட்டுப்பாட்டு விரைவு மையத்தின் (ஏஎன்டிஎஃப்), தலைவர்களுக்கான இரண்டாவது தேசிய மாநாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
போதைக்கு அடிமையாவது தனிநபரை மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தையே சீர்குலைக்கும் அழிவின் பாதை. இதனால், சமுதாயத்தின் ஆரோக்கியம் கருதி, 1985இல் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இதன்படி, போதைப்பொருள் தயாரித்தல், கடத்துதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் சட்டப்படி குற்றமாகும். இந்தச் சட்டத்தின்படி குற்றவாளிக்குச் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும்.