

ரயிலில் பயணம் செய்பவர்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு ஏற்படும்வகையில் நடந்துகொள்வதைத் தவிர்க்கும்படி, தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை அவசியமான ஒன்று. பயணத்தின்போது நாம் பரவலாகப் பார்க்க நேரும் ஒழுங்கீனங்களை ரயில்வே நிர்வாகம் பட்டியல் போட்டுக் கண்டித்திருப்பது, பயணிகளின் நடத்தை எந்தளவுக்குத் தன்னலம் சார்ந்ததாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
புறநகர் மின்சார ரயில் பயணிகளைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டிருப்பினும், வெளியூர்களுக்குச் செல்லும் அதிவிரைவு ரயில் பயணிகளுக்கும் இது பொருந்தும். ஜனவரி, 2025இல் சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்ததன்படி, சென்னை கோட்டத்தில் ரயில்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 11,50,000 பேர் பயணிக்கின்றனர். அதில் எட்டரை லட்சம் பேர் மின்சார ரயில்களையும் மீதமுள்ளவர்கள் மற்ற ரயில்களையும் பயன்படுத்துகின்றனர்.