

தமிழ்த் திரையுலகின் மிக முக்கிய ஆளுமையான இளையராஜா திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரியமாகத் தமிழர்களும் தமிழ் ஆட்சியாளர்களும் கலைஞர்களுக்குக் கொடுத்துவரும் கெளரவத்துக்கான சமகால அத்தாட்சி இது. தலைமுறைகளைத் தாண்டி இயங்கிவரும் இளையராஜா, தனது முதல் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றியதற்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இந்த விழா அமைந்தது பெருமிதத்துக்குரியது.
1976இல் வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தனது ஆழ்ந்த இசை அறிவாலும், அயராத உழைப்பாலும், அபாரமான பரீட்சார்த்த முயற்சிகளாலும், வளமான கற்பனைகளாலும் திரையிசையின் போக்கையே மாற்றியவர். தனது இசை மூலம் பல படங்களின் வெற்றிக்கு பங்காற்றிய இளையராஜா, அதன் மூலம் திரையுலக வணிகத்தின் ஏறுமுகத்துக்கும் பெரும் தூணாக இருந்தவர்.