தலையங்கம்
கருவள விகிதம் குறைவு: சீரான வளர்ச்சி தேவை
இந்தியாவின் மொத்தக் கருவள விகிதம் 2023ஆம் ஆண்டுக்கான மாதிரிப் பதிவுக் கணக்கெடுப்பின்படி 2இல் இருந்து 1.9ஆகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. மொத்த மக்கள்தொகையில் ஓர் ஆண்டில் 1,000 பேருக்குப் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் 19.1இல் இருந்து 18.4 ஆகக் குறைந்துள்ளதும் இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் கருவள விகிதம் தேசிய சராசரியைவிடக் குறைந்திருப்பதும் (1.3) குறிப்பிடத்தக்கது.
ஒரு தலைமுறையைப் பதிலீடு செய்வதற்காக ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையே அந்நாட்டின் கருவள விகிதம் எனப்படுகிறது. கருவள விகிதம் குறைந்தபட்சம் 2.1 என்கிற அளவில் இருந்தால்தான் மக்கள்தொகை சீராகப் பராமரிக்கப்படும். ஆனால், 2023 கணக்கெடுப்பின்படி நாட்டின் ஒட்டுமொத்தக் கருவள விகிதம் இதற்கும் கீழே சரிந்திருக்கிறது.
