தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து மிளிரட்டும் தமிழகம்
தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு பெருமிதம் அளிக்கிறது. மத்தியப் புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறை சார்பில் நடத்தப்பட்ட ‘தொழிற்சாலைகள் ஆண்டுக் கணக்கெடுப்பு 2023-2024’இன்படி இந்தியா முழுவதும் உள்ள 1,95,89,131 தொழிலாளர்களில் தமிழகத்தின் பங்கு 15.24%. மொத்தமுள்ள 2,60,061 தொழிற்சாலைகளில் 15.43% தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதோடு, தொழில் வளர்ச்சி மையமாகவும் தமிழகம் விளங்குகிறது.
தமிழகத்தைத் தொடர்ந்து குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. நாட்டின் மொத்த மதிப்புக்கூட்டு வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் ஜவுளித் துறை, வாகனத் தயாரிப்பு, உணவுப்பொருள் தயாரிப்பு, வேதிப்பொருள் நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு, அதன் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன.
