

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஆதார விலை சாதாரண ரக நெல்லாக இருந்தால் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், சன்ன ரக நெல் என்றால் குவிண்டாலுக்கு 2,545 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய நிலவரத்துடன் ஒப்பிட்டால், இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
என்றாலும், இன்றைய விலைவாசி நிலவரப்படி இது தங்களுக்குப் போதுமானது அல்ல என்று விவசாயிகள் தரப்பிலிருந்து எழும் குரல்களுக்கு செவிமடுக்கப்பட வேண்டும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையைத் தமிழ்நாடு விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள்.