

‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்படுவதன் ஒரு பகுதியாக, நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய நிகழ்வு. கல்வித் திறனுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் நேரடித்தொடர்பு இருக்கும் நிலையில், குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிலை, சமூகப் பின்னணி, வாழும் பகுதியின் தன்மை போன்ற காரணங்களால் காலை உணவு உண்ண இயலாமல் பள்ளிக்கு வரும் மாணவர்களின் பசியைப் போக்குவதில் தமிழக அரசு தொடர்ச்சியாகக் கவனம் செலுத்துவது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு அளிக்கும் திட்டத்தை, 2022 மே 7இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110இன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதே ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15இல் மதுரையில் இத்திட்டம் அவரால் நேரடியாகத் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் கட்டமாக மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் பஞ்சாயத்துகளிலும் உள்ள 1,545 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1,14,095 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமலுக்கு வந்தது. ரூ.33.56 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.