

நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி, இந்தியன் மிலிட்டரி அகாடமி போன்றவற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டு, பயிற்சிக்காலத்தில் காயமுற்றதால் விடுவிக்கப்பட்ட ஏறக்குறைய 500 வீரர்கள் பல ஆண்டுகளாக மருத்துவச் சிகிச்சைக்கான பொருளாதார வசதியின்றித் தவிக்கும் நிலை மிகவும் கவலை அளிக்கிறது.
ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டுபுரிய விரும்பும் பல இளைஞர்களின் கனவு, நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி, இந்தியன் மிலிட்டரி அகாடமி போன்ற நிறுவனங்களில் சேர வேண்டும் என்பதுதான். இவற்றுக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்குக் குறிப்பிட்ட காலம் கடுமையான பயிற்சி அளிக்கப்படும். சிலர் கெடுவாய்ப்பாகப் பயிற்சியின்போது காயங்களுக்கு உள்ளானால், அவர்கள் பணியில் சேரும் முன்பே மருத்துவரீதியான காரணங்களால் விடுவிக்கப்படுவார்கள்.