

வ
ரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத சரிவைக் கண்டிருக்கிறது அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு. கடந்த வியாழனன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ஆகச் சரிந்திருக்கிறது. ஜனவரி தொடங்கி இதுவரை ரூபாயின் செலாவணி மதிப்பு 8% குறைந்திருக்கிறது. வளர்ந்துவரும் சந்தைகளைக் கொண்ட எல்லா நாடுகளின் செலாவணிகளுக்கும் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது என்றாலும், ஆசியாவிலேயே அதிகம் மதிப்பிழந்த செலாவணியாக ரூபாய் இருப்பது மேலும் கவலையளிக்கும் விஷயம்.
ரூபாய் மதிப்பு குறையப் பல காரணங்கள். வளரும் நாடுகளின் செலாவணிச் சந்தையை அளக்கும் குறியீடான, ‘மார்கன் ஸ்டான்லி மூலதனம்-இந்தியா’ அமைப்பின் குறியீட்டெண், இந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இதுவரை 6% குறைந் திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலை அதிகரிப்பது, ரூபாயின் மதிப்புச் சரிவுக் கான காரணங்களில் முக்கியமானது. எண்ணெய் இறக்குமதியாளர்கள் அதிக டாலரைக் கொடுக்க வேண்டியிருப்பதால், டாலர்களுக்கான தேவை அதிகரித்து அதன் மதிப்பும் உயர் கிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துவருவதால் வெளி வர்த்தகத்தில், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) 2017-18 நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஜிடிபியில் 1.9% மதிப்புக்கு உயர்ந்துவிட்டது. 2019-ம் ஆண்டின் இறுதியில் இது மேலும் உயர்ந்து 2.5% ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரூபாயின் மதிப்பு மேலும் சரியும் ஆபத்து காத்திருக்கிறது.
உலகின் மிகப் பெரிய செலாவணிகளுக்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு பிப்ரவரி முதலே 7.5% அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மான காப்பு வரி மோதல்கள், சர்வதேச வணிகத்தில் நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா தனது பணக் கொள்கையில் தாராள அணுகுமுறையைக் கைவிட்டது மற்றொரு காரணம். அமெரிக்காவிலேயே முதலீட்டுக்கு அதிக வட்டி அல்லது வருமானம் கிடைக்கிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் தனிநபர்களும் தங்களுடைய இந்திய முதலீடுகளை விலக்கிக்கொண்டு, அமெரிக்காவில் முதலீடுசெய்கின்றனர். இதனால், இந்தியக் கடன் பத்திரங்களின் விலைகளும் சரிந்திருக்கின்றன.
அமெரிக்க அரசு தனது பணக் கொள்கையைச் சீர்திருத்தத் தொடங்கியபோதே இப்படியான விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதத்தை இந்த ஆண்டு மேலும் சிறிது உயர்த்தப்போகிறது. அப்படிச் செய்தால், இந்தியா உள்ளிட்ட பல நாட்டுச் செலாவணிகளின் மதிப்பு மேலும் குறையும். இது இந்தியப் பொருளாதாரத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இந்த நெருக்கடி யிலிருந்து மீள மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தீர்க்கமான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்!