

அண்மைக்காலமாக, சென்னை மாவட்டத்துக்கு வெளியே போக்குவரத்து சிக்னல்களைப் பராமரிக்கவோ, மின்சாரக் கட்டணம் செலுத்தவோ தமிழக அரசின் எந்தத் துறையும் பொறுப்பு எடுத்துக்கொள்வதில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மக்கள், வாகன ஓட்டிகளின் நலன் சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
சாலை விபத்துகளைத் தடுப்பதில் போக்குவரத்து சிக்னல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றைப் பராமரிக்கத் தனியே மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஆனால், சென்னை மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களில் சிக்னல்களைப் பராமரிக்கவோ, மின் கட்டணம் செலுத்தவோ அரசின் எந்தத் துறையும் பொறுப்பு எடுத்துக்கொள்வதில்லை என்று கோவையைச் சேர்ந்த நுகர்வோர் நல அமைப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. கோவை மாவட்டத்தில் மட்டுமே போக்குவரத்து சிக்னல்களுக்கு ரூ.1 கோடி மின் கட்டணம் பாக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.