

பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் விடப்படுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகள் செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும், மாசுபாட்டு நடவடிக்கைகளைத் தடுப்பதில் மாவட்ட ஆட்சியர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அண்மையில் கூறியுள்ளது. இந்தப் பிரச்சினையில் மக்களை நீதிமன்றம் கைவிட்டுவிடாது என்கிற நம்பிக்கையை இந்தக் கருத்து ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாலாற்றின் படுகையில் பல தோல் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. தோல் ஏற்றுமதி நாட்டின் அந்நியச் செலாவணியில் முக்கியப் பங்கு வகித்தாலும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மிகக் கடுமையானவை. வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பாலாற்றைச் சார்ந்திருக்கும் உள்ளூர் மக்களே அவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.