

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முன்வைத்து இந்தியா மீது வர்த்தகப் போரைத் தொடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அடுத்தடுத்து நிகழவிருக்கும் நிகழ்வுகள் மூலம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதேவேளையில், நெருக்கடிகளுக்கு இடையே தனது நிலையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
ஏற்கெனவே, இந்திய இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி விதித்திருந்த டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவைத் தண்டிப்பதாகக் கருதிக்கொண்டு, மேலும் 25% வரிகளைச் சேர்த்து மொத்தம் 50% வரி விதித்திருக்கிறார். உக்ரைன் மீதான போருக்கான நிதியைத் திரட்ட இந்தியாவுடனான வணிகப் பலன்களை ரஷ்யா பயன்படுத்திக்கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டுகிறார். இந்த வரிவிதிப்பு இந்தியாவுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.