

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் நீரிடியால் (Cloud burst) ஏற்பட்ட திடீர் வெள்ளம் ஏற்படுத்தியிருக்கும் உயிரிழப்புகளும் பெரும் சேதங்களும் மிகுந்த கவலை அளிக்கின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவாக இயற்கைப் பேரிடர்கள் புதிய சவாலாக மாறிவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதை எதிர்கொள்ளும் வகையில் திட்டங்களைத் தீட்டுவதில் கவனம் செலுத்தியே ஆக வேண்டிய தருணம் இது.
இமயமலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாசி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நீரிடியால் ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கதேராவின் வடிகாலில் நீர்மட்டம் பல மடங்கு அதிகரித்து, தராலி கிராமத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தராலி கிராமத்தின் வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ளம், மண் சரிவு சார்ந்த காணொளிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.