

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்திருக்கும் புகார்கள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. நாட்டையே அதிரவைத்திருக்கும் இந்தப் புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், நூற்றுக்கணக்கான பெண்கள் / சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாகப் பகிரங்கமாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜூன் 22இல் அவர் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தாலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என ஜூன் 27இல் வழக்கறிஞர்கள் வலியுறுத்திய பின்னர்தான் விவகாரம் முழுமையான கவனம் பெற்றது. ஜூலை 3இல் இது தொடர்பாக, முறையாக அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
ஆரம்பத்தில், அந்தச் சடலங்கள் தற்கொலை செய்துகொண்டவர்கள் அல்லது விபத்தில் இறந்தவர்களுடையதாக இருக்கும் என்றே தான் கருதியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்கள் / சிறுமிகளின் சடலங்கள் அவை எனத் தெரியவந்தாலும், தொடர்ந்து பல காலமாகச் சடலங்களைப் புதைக்கவும், எரிக்கவும் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பாலியல் வன்கொடுமையை நேரில் பார்த்த சாட்சிகளும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஒத்துழைக்க மறுத்தால் அவரும் கொல்லப்படலாம் என்று மிரட்டப்பட்டதாகவும், 2014இல் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பின்னர், தனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கொல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தோண்டியெடுத்து அவர்களுக்கு அவரவர் சமூக வழக்கத்தின்படி இறுதி அஞ்சலி செய்யப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். சாட்சிக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்கிற உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே, இதில் தொடர்புடையவர்கள் குறித்த முழு விவரத்தையும் வழங்குவதாக அவர் கூறியிருந்தார்.
அதன்படியே ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் அவர் சாட்சியம் அளித்துவருகிறார். இவரது புகார்களைத் தொடர்ந்து, 2003இல் காணாமல் போன பெண்ணின் தாய், மீண்டும் புதிதாக ஒரு புகார் அளித்திருக்கிறார். தனது பெண்ணின் எலும்புக்கூட்டையாவது தோண்டி எடுத்துக் கொடுத்தால், அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக ஆரம்பத்தில் மௌனம் காத்த தர்மஸ்தலா நிர்வாகம், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியிருப்பதுடன் நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே அரசியல் செல்வாக்கு கொண்டவர் என்பதால், அரசியல்ரீதியாகவும் கடும் விமர்சனங்கள், விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை உருவாக்கியிருக்கிறது.
தர்மஸ்தலா கோயிலில் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நடந்ததாக ஏற்கெனவே புகார்கள் உண்டு. 1987இல், 17 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்துக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இதேபோல், 2003இல் ஒரு மருத்துவ மாணவி காணாமல் போன சம்பவம் தொடர்பாகவும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2012இல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட 17 வயது இளம்பெண்ணின் பெற்றோரும் தர்மஸ்தலா கோயில் நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
இந்த விவகாரத்தில் எவ்வித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒருவேளை அந்த நபர் தவறான தகவலைச் சொல்லியிருந்தால், அவரது கூற்று பொய்தான் என நிறுவவும் பாரபட்சமற்ற விசாரணைதான் துணை செய்யும் என்பதையும் ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்!