சிபிஎஸ்இ காட்டிய அலட்சியத்துக்கு அடி!

சிபிஎஸ்இ காட்டிய அலட்சியத்துக்கு அடி!
Updated on
1 min read

ருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர் பான விவாதங்கள் எல்லையே இல்லாமல் தொடர்கின்றன. “இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் கல்வித் துறையானது முழுக்க மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய அதிகாரம்; டெல்லி அதில் தலையிடக்கூடிய வகையில் பொதுப் பாடத்திட்டம், பொதுத் தேர்வு என்பன மையப் படுத்தப்படக் கூடாது” என்ற குரல்கள் ஒலித்தபடியே இருக்கின்றன. மத்திய அரசோ, ஒரே தேர்வு முறை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. சரி, இப்படி நாடு முழுக்க ஒரே வகையிலான தேர்வை நடத்தும் முடிவை நோக்கி அரசு நகரும்போது, இத்தகைய தேர்வுகளை நடத்தும் அமைப்புகள் எவ்வளவு பரந்த தன்மைக்கு மாற வேண்டும்? கடைசி மாணவரையும் அது உள்ளிழுக்க முற்பட வேண்டாமா? இந்தத் தேர்வை நடத்தும் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இயின் நடவடிக்கையோ ஏமாற்றத்தையே தருகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வின்போது, தமிழ் மொழியில் அமைந்த கேள்வித்தாளில் 49 வினாக்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்புகள் தவறான வகையிலும் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்குக் குழப்பங்களை விளைவிக்கும் வகையிலும் அமைந்திருந்தன. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும் நிலையில், இத்தகைய தவறான வினாக்களால் தமிழ்வழி யில் படித்துத் தேர்வெழுதிய மாணவர்கள் 196 மதிப்பெண்கள் வரை இழக்கும் சூழல் ஏற்பட்டது. மிகத் தீவிரமான ஒரு தவறு இது. ஆங்கில கேள்வித்தாளில் 49 கேள்விகள் தவறாக அமைந்திருந்ததால் அது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கும் என்பதை யோசித்தால் இதன் தீவிரம் புரியும். தேர்வு நடந்த உடனேயே இதுகுறித்து கல்வியாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினையைப் பேசின. ஆனால், துளியும் அலட்டிக்கொள்ளவில்லை சிபிஎஸ்இ. இதுகுறித்து மனித வளத் துறை அமைச்சர் ஜவடேகரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “இந்த விஷயத்தைக் கேள்விப்படவே இல்லை” என்றார். அப்புறமும்கூட அவரும் எதுவும் அக்கறை காட்டவில்லை.

இத்தகைய சூழலில்தான் “வினாத்தாள் குளறுபடிகளால் தகுதியான மாணவர்களின் மருத்துவக் கனவு வீணாகக் கூடாது, அவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தார் மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன். இந்த வழக்கில் மாணவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு. “49 வினாக்களுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு பிழையானது. இந்த ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்” என்று நீதிபதி கள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அஹம்மது இருவரும் உத்தரவிட்டிருப்பதை, சிபிஎஸ்இ காட்டிய அலட்சியத்தின் மீதான அடியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த உத்தரவானது ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கும் தரவரிசைப் பட்டியலில் பிரச்சினையையும் புதிதாகச் சில சிக்கல்களையும் உருவாக்கலாம். ஆனால், சிபிஎஸ்இ அதுவாக தீர்வு கண்டிருக்கக் கூடிய, அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட விளைவே இது என்பதை அது உணர வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in