

இந்தியாவில் நாய்க்கடிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தெரு நாய்களால் மட்டுமல்லாமல், வளர்ப்பு நாய்களாலும் ஆபத்து ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. இவ்விஷயத்தில் அரசு ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்காதவரை, வெறிநோய் (ரேபிஸ்) போன்ற பாதிப்புகளுக்குப் பலரை இழக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
2023ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, இந்தியாவில் தோராயமாக 6.2 கோடி தெருநாய்கள் உள்ளன. 2019-2022 காலக்கட்டத்தில், நாட்டில் 1.6 கோடி நாய்க்கடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2023இல் மட்டும், 30 லட்சம் நாய்க்கடிச் சம்பவங்கள் பதிவாகின.