சிறுபத்திரிகைகள் களம் மாற வேண்டும்!

சிறுபத்திரிகைகள் களம் மாற வேண்டும்!
Updated on
1 min read

கா

த்திரமான இலக்கியப் படைப்புகள், ஆரோக்கியமான விவாதங்கள் என்று இலக்கிய முன்னகர்வுகளுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்தின் சிந்தனை பரிணாம வளர்ச்சிக்கும் முக்கியக் கண்ணியாக இருக்கும் சிறுபத்திரிகைகள் தமிழில் தற்போது தனது வாசகப் பரப்பை இழந்துவருகின்றன. கடந்த காலம்போல அல்லாது வெகுஜன பத்திரிகைகளும் இலக்கியத்தைக் கையில் எடுத்திருக்கும் நிலையில் நீளும் தீவிரமான வெளி நோக்கி நகர வேண்டிய சிறுபத்திரிகைகள் அவற்றின் உள்ளடக்கம் விஷயத்தில் ஒரு காலத்தேக்கத்தை அடைந்துவிட்டிருப்பதை இந்நாட்களில் உணர முடிகிறது.

சிறுபத்திரிகைகளுக்கே உரிய பரிசோதனை முயற்சிகள், கருத்து மோதல்கள் ஆகியவை குறைந்து வெகுஜன பத்திரிகைகளைப் போல ஒரு சமரசக் கலாச்சாரத்துக்கு அவை இடம்பெயர்ந்துவிட்டதைப் பலரும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த கால வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால் தன்னுடைய பின்னடைவு எங்கே நடந்திருக்கிறது என்பதை சிறுபத்திரிகைகள் உணர்ந்துவிட முடியும்.

தீவிர எழுத்தை இன்றும் தக்கவைத்துக்கொள்வதற்கு சிறுபத்திரிகைகள்தான் உறுதுணையாக இருக்கின்றன. ‘அகம் புறம்’, ‘அடவி’, ‘அந்திமழை’, ‘அம்ருதா’, ‘இடைவெளி’, ‘உயிர் எழுத்து’, ‘உயிர்மை’, ‘உன்னதம்’, ‘ஓலைச்சுவடி’, ‘கணையாழி’, ‘கல்குதிரை’, ‘காக்கைச் சிறகினிலே’, ‘காலச்சுவடு’, ‘குதிரைவீரன் பயணம்’, ‘சிலேட்’, ‘சிறுபத்திரிகை’, ‘செம்மலர்’, ‘சொற்கள்’, ‘தடம்’, ‘தளம்’, ‘திணை’, ‘தீராநதி’, ‘நம் நற்றிணை’, ‘நான்காவது கோணம்’, ‘புதிய சொல்’, ‘புது விசை’, ‘பேசும் புதிய சக்தி’, ‘வலசை’, ‘மணல் வீடு’ எனப் பல்வேறு சிறுபத்திரிகைகள் இன்றும் தொடர்ந்தோ விட்டுவிட்டோ வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுபத்திரிகை வாசகர்கள் எப்போதுமே ஆகச் சிறுபான்மையினர்தான். அந்தச் சிறிய வட்டத்திலிருக்கும் கூட்டமே தீவிர சிந்தனைச் சூழலுக்கு வளம் சேர்ப்பதாக இருந்திருக்கிறது.

தற்போதைய இந்தத் தேக்கநிலைக்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. வாசிப்புக் கலாச்சாரத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. தீவிரமான வாசகர்களும்கூட சிறுபத்திரிகைகளைத் தங்களது புத்தக அலமாரிகளில் அடுக்கி மட்டுமே வைத்திருப்பதாக சிறுபத்திரிகை ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்க முடிகிறது. விமர்சனப்போக்கில் ஏற்பட்டிருக்கும் சரிவை இதற்கான பிரதான காரணமாகச் சொல்லலாமா? ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அவை ஒருவழிப் பிரச்சாரங்களாக, புகழ்பாடும் கூட்டங்களாக, நுட்பமான பார்வையற்ற மேலோட்டமான சொற்பொழிவுகளாகச் சுருங்கிவிட்டன. ஒரு வாசகர் தனது வாசிப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு இத்தகைய கூட்டங்கள் பெருமளவில் உதவுவதில்லை. இதைப் பிரதிபலிப்பதாகவே பெரும்பாலான சிறுபத்திரிகைகள் வெளிவருகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

பதிப்புச் சூழலில் ஏற்பட்டிருக்கும் வசதிகள் நம்முடைய கற்பனைகளை எவ்வளவு சூறையாடியிருக்கிறது என்பதை சிறுபத்திரிகைகளின் அட்டைகளை வைத்தே யூகிக்க முடியும். எப்பேற்பட்ட முயற்சிகளெல்லாம் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன. ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’ உள்ளிட்டவை தொடக்கிவைத்த இடைநிலை பத்திரிகைகளுக்கு நெருக்கமான கலாச்சாரமும் இன்றைய சிறுபத்திரிகைகளின் பண்பு மாற்றத்துக்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். ஒரு காலத்தின் தேவை இன்னொரு காலத்தில் மாறுவதையும் உணர்ந்தால்தான் அடுத்த நிலை நோக்கி நகர முடியும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in