

2019ஆம் ஆண்டு முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத, முறையான கட்சி அலுவலக முகவரிகளைக் கொண்டிராத 345 அரசியல் கட்சிகளை, பதிவுசெய்யப்பட்ட - அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் தொடங்கியிருப்பது, வரவேற்கத்தக்கது. தேர்தல் அரசியலில் ஈடுபடாத அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த, இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தேவை.
இந்தியக் குடிமக்கள் தங்களுக்கென சங்கங்கள், அமைப்பு உள்ளிட்டவற்றைத் தொடங்குவதற்கான அடிப்படை உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 19(1)(சி) வழங்குகிறது. 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 29ஏ பிரிவு இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியைப் பதிவுசெய்வதற்கான தேவையை வலியுறுத்துகிறது. இதன் விதிமுறைகளைப் பூர்த்திசெய்யும் அரசியல் கட்சிகளை, அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகத் தேர்தல் ஆணையம் பதிவுசெய்கிறது.