

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உமாதேவி, கருவில் இருந்தது பெண் சிசு என்று சொல்லப்பட்டதால், கருக்கலைப்பு செய்ய வேண்டும் என அவரது கணவர் வீட்டினரால் துன்புறுத்தப்பட்ட நிலையில், தனது ஒன்றரை வயதுப் பெண் குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைத் தெரிந்துகொண்டு கருவிலேயே கொல்வது பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் அதிகபட்ச வன்முறைகளுள் ஒன்று. இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையான வாழ்வுரிமைக்கு எதிரானது.
கலாச்சாரம், சமூக அழுத்தம், பொருளாதார நிலை போன்றவற்றின் காரணமாகத் தங்கள் வயிற்றில் இருக்கும் பெண் சிசுவைச் சட்ட விரோதமாகக் கொல்ல பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் இந்தியா வளர்ந்துவரும் நிலையில், கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிய மருத்துவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பெரும் பின்னடைவு.