

பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்திருக்கும் நிலையில், சர்வதேச அளவிலான வர்த்தகப் போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நலனை மட்டும் மையமாகக் கொண்டு டிரம்ப் எடுத்துவரும் இந்நடவடிக்கைகள் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்னும் அச்சமும் எழுந்திருக்கிறது. இதில் இந்தியாவும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மத்திய அரசின் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல், வர்த்தகம், குடியுரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அந்த வகையில் இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதாக விமர்சித்துவந்த டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு என்னும் பெயரில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக வெவ்வேறு விகிதத்தில் வரி விதிப்பை அறிவிப்பது, சம்பந்தப்பட்ட நாட்டின் எதிர்வினையைப் பொறுத்து அதை மாற்றுவது எனக் குழப்பம் விளைவித்துவருகிறார்.