

தமிழ்நாட்டில் உள்ள பல ‘நுகர்வோர் குறைதீர் ஆணைய’ங்களில் பணியாளர் பற்றாக்குறை, போதுமான கட்டமைப்பு வசதிகள் இன்மை போன்றவற்றால் அவற்றின் அடிப்படை நோக்கமே கேள்விக்குறி ஆகியுள்ளது. நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கூறுமளவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கவலை அளிக்கிறது.
விற்பனையாளரால் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் நிவாரணம் பெற்றுத் தரவும் 1986இல் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் தொடங்கப்பட்டன. வழக்கமான நீதிமன்ற நடைமுறை எதுவும் பின்பற்றக் கூடாது என்கிற கவனத்தோடு நுகர்வோர் ஆணையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. விரைவான, செலவே இல்லாத, எளிமையான தீர்வுகளே இவற்றின் அடிப்படை நோக்கம். ஒரு புகாரை 90 நாள்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.