

சீர்காழியில் மூன்று வயதுக் குழந்தையைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, கொடூரமாகத் தாக்கியதாக 16 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், அந்தச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தில் போக்சோ குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே அது குறித்துப் போதுமான பயிற்சியும் தெளிவும் இல்லை என்பதைக் குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து கவனப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், மயிலாடுதுறையில் குழந்தைகள் நலத் துறை சார்பில் காவல் துறையினர், மாவட்டக் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர், போக்சோ வழக்கைக் கையாளும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.