

வக்ஃபு திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்த மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த மாற்றங்களை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், இம்மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி, நீண்டகாலமாக விவாதப் பொருளாக இருக்கும் வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டியது அவசியம்.
இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பே 1913இல் முஸ்லிம் வக்ஃபு செல்லுபடியாக்கும் சட்டம்; 1923இல் முஸ்லிம் வக்ஃபு சட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு, 1954இல் மத்திய வக்ஃபு சட்டம் கொண்டுவரப்பட்டது. 1995இல் கொண்டுவரப்பட்ட புதிய வக்ஃபு சட்டம், 2013இல் அந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்கள் என வக்ஃபு வாரியத்தின் வரலாறு நீண்டது.