

மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படும் பங்கின் அளவை, தற்போதுள்ள 41% இருந்து 40% ஆகக் குறைக்க 16ஆவது நிதி ஆணையத்திடம் வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களும் வலியுறுத்தும் 50% வரி பகிர்வு வழங்குவதை மத்திய அரசும் நிதி ஆணையமும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குகின்றன. இதில், மத்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயை எப்படி நிதிப் பகிர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது கூறின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது.