

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என்பதும் அவர்களில் 36 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகள் தொடர்பாக அரசுசாரா நிறுவனம் ஒன்று பொதுநல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற அதன் மீதான விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபர்ணா பட், குழந்தைகள் கடத்தலில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கச்சிதமான வலைப்பின்னல் அமைத்துக் குற்றவாளிகள் செயல்படுவதால் கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றார். முன்னதாக, காணாமல் போன குழந்தைகளின் பட்டியலையும் மீட்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலையும் மாநிலவாரியாகச் சமர்ப்பிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.