

இந்தியாவில் வாழ்பவர்களில் இரண்டு பேரில் ஒருவர் வாழ்க்கை முறை சார்ந்த - தொற்றா நோயால் அவதிப்பட்டு வருவதாகச் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தொற்றும் நோய்களைவிட இந்தத் தொற்றா நோய்கள் அதிகரித்துவருவதன் தீவிரத்தை அரசும் சமூகமும் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
நொய்டாவைத் தலைமையகமாகக் கொண்ட ரெட்கிளிப் ஆய்வகம் நடத்திய ஆய்வில் நாடு முழுவதும் 28 லட்சம் பேர் குறித்த தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. மக்கள்தொகையில் பெரும் பகுதியைச் சர்க்கரை நோய், தைராய்டு கோளாறுகள், கொழுப்புச் சமநிலை இன்மை, சிறுநீரகக் கோளாறு, கொழுப்புக் கல்லீரல் நோய், மூட்டுவலி, இதயநோய், புற்றுநோய் ஆகிய நாள்பட்ட நோய் நிலைகள் பாதித்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.