

கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. முறையான காரணம் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டுவரும் இந்தப் பணி, எப்போது தொடங்கும் என்பதை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது.
2021இல் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய டிஜிட்டல் வடிவிலான முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான அதிகாரபூர்வப் பணிகளை 2019இல் உள்துறை அமைச்சகம் தொடங்கியது. ஆனால், 2020இல் கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், அந்தப் பணி தடைபட்டது. கரோனா காலத்தில் நாட்டின் நிர்வாக எல்லைகள் முடக்கப்படும் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டு வந்ததால், 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.