

கடந்த 21 மாதங்களாக, அமைதியிழந்து தவித்துவரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்கிற குரல்கள் தொடர்ந்து ஒலித்துவந்த நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்தித்துத் திரும்பிய பின்னர் தனது ராஜினாமா முடிவை அவர் அறிவித்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் முழுமையான கவனம் செலுத்தினால் மட்டுமே மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவர முடியும்.
பெரும்பான்மை இந்துச் சமூகமான மெய்தேய் சமூகத்தினரைப் பட்டியல் பழங்குடியினராக அறிவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மணிப்பூர் அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் 2023 மார்ச் 27இல் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து பதற்றச் சூழல் உருவானது. மே 3இல் இரு தரப்பினருக்கும் இடையே வெடித்த மோதல் மணிப்பூரின் அமைதியைக் குலைத்தது. இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 60,000க்கும் மேற்பட்டோர் வீடிழந்திருக்கின்றனர்.