

கா
விரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சந்தித்துக்கொண்ட முதல் கூட்டம் ஆரோக்கியமான சூழலில் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சிதருகிறது. மாநிலங்களுக்கு இடையே ஒரு ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கு வழி வகுக்கக்கூடியதாக இந்தச் சந்திப்பு அமைந்தது. ஜூலை 2-ல் நடந்த இந்தக் கூட்டத்தில், 31.24 டிஎம்சி நீரைத் தமிழகத்துக்குக் கர்நாடகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தீர்ப்பாயம் வழங்கிய மாதாந்திர அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, திறந்துவிடப்படும் நீரின் அளவு முடிவெடுக்கப்படும்.
மழைநீர் சேகரிப்பு விவரங்கள், சேகரமான, வெளியேற்றப்பட்ட நீரின் அளவு, பயிரிடும் முறைகள், நீர்த்தேக்கங்கள் குறித்த விவரங் கள் உள்ளிட்ட தகவல்களை முறையாகச் சேகரித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சமர்ப்பிப்பதன் மூலம் நதிநீர்ப் பகிர்வை வெற்றிகரமாகச் செய்ய முடியும். இதற்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம். பருவமழைக் காலங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை இந்தச் சந்திப்பை நடத்தலாம் என திட்டமிடப்பட்டிருக்கிறது. தென்மேற்குப் பருவமழை கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், இந்த வருடம் மழைப்பொழிவு சீரான அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவதில் எந்தப் பிரச்சினையும் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இருக்காது என்று நம்பலாம்.
கர்நாடகத்தின் முக்கியமான நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு நீர்வரத்து இருக்கும் வரை, உபரிநீரைத் திறந்துவிடுவதில் அம்மாநிலத்துக்கு எவ்விதப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. அதிலிருந்து தவறும்பட்சத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த விவாதத்தை இன்னுமொரு வழக்கு மூலம் கர்நாடகம் எதிர்கொள்ள நினைத்தால் நிலைமை மோசமடையும்.
1956-ல் இயற்றப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகள் சட்டப்படி, ஒரு தீர்ப்பாயத்தைச் செயல்படுத்து வதற்கான திட்டத்தை வழங்குவது மத்திய அரசின் கடமை. திட்டத்தை மாற்றுவதற்கோ அல்லது அப்படியே விட்டுவிடுவதற்கோ நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னால் நாடாளுமன்றத்தின் அனுமதி வேண்டும் என கர்நாடகம் வாதிடுவது சர்ச்சைக்குரியது. நடுவர் மன்றத் தீர்ப்பின் உத்தரவில் உச்ச நீதிமன்றம் செய்த திருத்தங்கள் மற்றும் 1956-ம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 6-ஏ ஆகியவற்றோடு வரைவுத்திட்டம் பொருந்திவருவதை உறுதிசெய்த பிறகே உச்ச நீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.
எல்லாவற்றையும் தாண்டி, காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் முதல் கூட்டமும் சுமுகமான முறையில் நடந்திருக்கிறது. இந்நிலை யில் கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களுக்குள் நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் ஒத்துழைக்க வேண்டும். பிரச்சினைகளை விவாதித்துவிட்டு முறையாக நீரைப் பங்கிட்டுக்கொள்வதன் மூலம் ஒரு விடிவுகாலத்துக்கு வழிவகுக்கலாம். சர்ச்சைக்குரிய சட்ட விவாதங்களில் பன்னெடுங்காலமாகச் சிக்கிக்கொண்டிருப்பதிலிருந்து விடுபட்டு, பரஸ்பர நீர்ப் பகிர்வின் மூலம் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கலாம்!