

வேலூர் அருகே, பெண்களுக்கான ரயில் பெட்டியில் அத்துமீறி நுழைந்த நபர், அதில் பயணித்த கர்ப்பிணியைப் பாலியல் வன்முறை செய்ய முயன்று, ரயிலிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. பெண்களுக்கான பாதுகாப்பைக் கேள்விக்கு உள்படுத்தும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், பெண்களுக்கான பிரத்யேக ரயில் பெட்டியிலும் இப்படியான குற்றங்கள் நிகழ்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்விஷயத்தில், ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகளில் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் தொய்வு ஏற்படுவது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.
திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஆந்திரத்தைச் சேர்ந்த பெண், தனது சொந்த ஊர் செல்வதற்காக பிப்ரவரி 6 அன்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் விரைவு ரயிலில் மகளிருக்கான பெட்டியில் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.