

தமிழகத்தில், பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கிருஷ்ணகிரியில் எட்டாம் வகுப்பு மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியான செய்தி ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள் மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவியிடம், அப்பள்ளியின் அறங்காவலர் வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வெளியான செய்திகள் பதைபதைக்க வைக்கின்றன.
ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் காவல் துறையினர், அரசியல் பிரமுகர்கள் எனக் கண்ணியத்துக்குரிய பொறுப்பில் இருக்கிறவர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்டுவருகின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்கப்படும் வகையில் தமிழக அரசால் ‘போக்சோ’ சட்டத்தில் அண்மையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணையிலும் தீர்ப்பு வழங்கப்படுவதிலும் ஏற்படும் காலதாமதம் குற்றவாளிக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. ‘போக்சோ’ வழக்குகளில் குற்றம் நிகழ்ந்த அல்லது புகார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் காவல் துறையினர் விசாரணையை முடித்து, ஓராண்டுக்குள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதிகாரிகள் - மருத்துவ வசதி - நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல தரப்புகளில் நிலவும் பற்றாக்குறையாலும் போதாமையாலும் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை.