

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது வேதனைக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கும் நிலையில், அவற்றிலிருந்து யாரும் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.
2024 ஜூலை 2 அன்று உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் மதத் தலைவர் போலே பாபா நடத்திய நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரண்டதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். 2013இல் மத்தியப் பிரதேச மாநிலம் ரதன்கர் மாதா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேரும் 2011இல் கேரள மாநிலம் ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 106 பேரும் உயிரிழந்தனர். இப்படி ஏராளமான அசம்பாவிதங்களை உதாரணங்களாகச் சொல்லலாம்.