

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகளைத் தற்காலிக நீதிபதிகளாக உயர் நீதிமன்றங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிரச்சினைக்கு நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்கப் பல ஆண்டுகள் அலைய வேண்டியிருக்கும் என்கிற அவநம்பிக்கை இந்தியச் சமூகத்தின் ஆழ்மனத்தில் பதிந்துவிட்டது என்றே கூறலாம்.
நீதிமன்றங்களில் பல்வேறு பொறுப்புகளுக்கான காலிப் பணியிடங்கள் அப்படியே தொடர்வது இதற்கு முக்கியக் காரணம். குறிப்பாக, நீதிபதிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது வழக்குகளைத் தேங்கவைக்கிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 18 லட்சம் குற்றவியல் வழக்குகளும் 44 லட்சம் சிவில் வழக்குகளுமாக 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.