

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கும் 2025-26ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி இல்லை என்கிற அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளித்திருக்கிறது. அதேவேளையில், நாட்டின் வளர்ச்சியைப் பின்னுக்கு இழுக்கும் பிரச்சினைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படாதது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.
புதிய வருமான வரி நடைமுறையில் நடப்பு நிதியாண்டில் ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் வரி இல்லை என்று இருக்கிறது. அது, ஒரேயடியாக ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் அதிகரித்து, சேமிப்பும் முதலீடும் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்; நுகர்வு சக்தி அதிகரிப்பதால் வரி வருவாய் அரசுக்கே கிடைக்கும்.