

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாகப் பதவியேற்றிருக்கும் டிரம்ப், முதல் நாளிலிருந்தே சர்ச்சைக்குரிய உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறார். அந்த வகையில், சட்டவிரோதக் குடியேறிகள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் உள்படப் பல்வேறு நாடுகளின் தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படவிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், இந்தச் சவாலை இந்தியா எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவிவருகிறது. டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக் காலத்தில், அவருடன் நெருங்கிய உறவைப் பிரதமர் மோடி பேணிவந்தார்.