

தமிழகத்தின் நாயக்கர்பட்டி, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்க்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தன்னெழுச்சியாகப் போராடிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி இது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி உள்பட 2015.51 ஹெக்டேர் பரப்பில் டங்க்ஸ்டன் சுரங்கம் தோண்ட 2024 நவம்பரில் ஏலம் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி மேலூர், தெற்குத் தெரு, முத்துவேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் சுரங்கத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.