

குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்து, சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையைச் சேர்ந்த சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியளிக்கிறது. அண்மையில், பண மோசடி வழக்கு ஒன்றில் காவல் துறையைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திராவும் இது குறித்து வேதனை தெரிவித்திருக்கிறார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜுனைத் அகமது, தன் ஊழியரான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கவுஸிடம் மருத்துவக் கருவிகள் வாங்க ரூ.20 லட்சம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அந்தப் பணத்தை ஹவாலா பணம் எனக் கூறிப் பறிமுதல் செய்த திருவல்லிக்கேணி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித் துறையைச் சேர்ந்த தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோருடன் சேர்ந்து அதில் ரூ.15 லட்சத்தை எடுத்துக்கொண்டார்.