

மணல் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த சமூகச் செயல்பாட்டாளரும் அதிமுக முன்னாள் கவுன்சிலருமான ஜகபர் அலி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இயங்கிவந்த கல் குவாரி தொடர்பாக ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்களால் ஜனவரி 17 அன்று கொல்லப்பட்டார்.
கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் கனிம வளக் கொள்ளையர்களால் மிரட்டப்படுவதும் கொல்லப்படுவதும் இது முதல் முறையல்ல. 2023 ஏப்ரல் மாதம் தூத்துக்குடியில் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்திய கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்சிஸ் கொல்லப்பட்டார். 2022இல் கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் கொல்லப்பட்டார்.