

சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சுகள், போலிச் செய்திகள் அதிகரித்துவரும் நிலையில், முன்னணிச் சமூக வலைதள நிறுவனமான மெட்டா, தகவல் சரிபார்க்கும் கடமையிலிருந்து விலகத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவான பதிவுகள் - குறிப்பாக, போலிச் செய்திகள் ஃபேஸ்புக்கில் அதிகம் பரப்பப்பட்டதாகவும், அவரது வெற்றிக்கு இத்தகைய பதிவுகள் கணிசமாக உதவியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, அதுபோன்ற பதிவுகளின் உள்ளடக்கத்தைச் சரிபார்க்க ஃபேஸ்புக் (மெட்டா என 2021இல் பெயர் மாற்றம் கண்டது) முன்வந்தது. இதற்கெனத் தகவல் சரிபார்ப்பு வலைப்பின்னல் (ஐ.எஃப்.சி.என்.), ஐரோப்பியத் தகவல் சரிபார்ப்புத் தர நிர்ணய வலைப்பின்னல் (இ.எஃப்.சி.என்.) உள்ளிட்ட நிறுவனங்களுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது.