

பெண்கள் – சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைத் தமிழக அரசு கடுமையாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. காவல் துறையினர், ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் போன்றோர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் தண்டனைக் காலத்தை இரட்டிப்பாக்கி 20 ஆண்டுகளாக உயர்த்தியிருப்பது பெண்களின் நலன் மீதான அரசின் அக்கறையைக் காட்டுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான முதல் பத்து பெருநகரங்களில் சென்னையும் கோவையும் இடம்பெற்றிருக்கின்றன எனவும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்லும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குவதாகவும் குறிப்பிட்டார்.