

2023-2024இல் வாகனப் பதிவில் தமிழ்நாடு இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், ஆக்கபூர்வமான பல அம்சங்களைக் கூறுவதுடன் கவனம் செலுத்த வேண்டிய முக்கியப் பிரச்சினைகளையும் சேர்த்தே உணர்த்துகிறது.
நாடு முழுவதும் உள்ள சாலைப் போக்குவரத்து அலுவலகங்களைக் கணினிமயமாக்கம் செய்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை பதிவுச்சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் குறித்த தரவுகளை ‘பரிவாகன் சேவா’ என்கிற இணையதளம் மூலம் பகிர்கிறது. இதில் கடந்த ஆண்டு இந்தியாவில் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள் மாநிலம்வாரியாக அண்மையில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பதிவுசெய்வதில் தமிழ்நாடு தொடர்ச்சியாகவே முதல் மூன்று இடங்களில் இடம்பிடித்துவருகிறது. புதிய வாகனங்களைப் பொறுத்தவரை, 2021இல் 15.15 லட்சம் வாகனங்களும் 2022இல் 17 லட்சம் வாகனங்களும் 2023இல் 18.26 லட்சம் வாகனங்களும் பதிவுசெய்யப்பட்ட நிலையில், 2024இல் இந்த எண்ணிக்கை 19.5 லட்சமாக அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் வாகனங்களைப் பதிவுசெய்வதிலும் பதிவைப் புதுப்பிப்பதிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) 10,076.64 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன. இது 2022-2023ஐவிட, 33.29% அதிகமாகும். தமிழ்நாடு முழுவதும் உள்ள 148 அலுவலகங்களில் 98.4 லட்சம் பணப்பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகம்.