

விருதுநகர் மாவட்டம் பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் ஆறு தொழிலாளர்களைப் பலி கொண்டுள்ள வெடிவிபத்து, பட்டாசு ஆலைகளின் அலட்சியப் போக்கு எப்போது முடிவுக்கு வரும் என்கிற பெரும் ஆதங்கத்தை அளிக்கிறது. பட்டாசு உற்பத்தி என்பது தொழிலாளரின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத தொழில்தான்.
ஒரு வேதிப்பொருள் எதிர்பாராத நேரத்தில் தீப்பிடிக்க அதிக வெயிலும் காரணமாகலாம்; மழை, குளிர் காரணமாகக் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதும் காரணமாகலாம். எனினும், அரசு வகுத்துள்ள விதிமுறைகளை ஆலைகள் சமரசமின்றிப் பின்பற்றினால் விபத்துகளை நிச்சயம் குறைக்க முடியும். ஒருவேளை விபத்து ஏற்பட்டால்கூட, அதன் பாதிப்பையோ உயிரிழப்பையோ பல மடங்கு குறைக்க முடியும். ஆனால், ஆலைகள் இதையெல்லாம் முழுமையாகப் பின்பற்றுகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.