

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி, கழிவுநீர்த்தொட்டிக்குள் விழுந்து இறந்த சம்பவம், தனியார் பள்ளிகளை அரசு நெறிப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற கருத்தை வலுப்படுத்தியிருக்கிறது. ஜனவரி 3இல் விக்கிரவாண்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த நான்கு வயதுச் சிறுமியான லியா லட்சுமி, அங்குள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்ததாக ஆசிரியர்களும் பிற ஊழியர்களும் நிர்வாகத்தினரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளனர். கழிவுநீர்த் தொட்டிக்கான மூடி துருப்பிடித்த நிலையில் இருந்ததையும் தொட்டி சரியாக மூடப்படாமல் இருந்ததையும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், வகுப்பு ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.