

அரசுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள், சில நாள்களுக்கு முன்பு கோட்ட, மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முன்பாகத் தமிழ்நாடு முழுவதும் வாயில் கறுப்புத் துணி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் அவ்வப்போது இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுப்பதும், அந்தப் போராட்டங்களுக்கு அரசிடமிருந்து சாதகமான பலன் கிடைக்காமல் போவதும் துரதிர்ஷ்டவசமானது.
பொதுவாக, அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப்பலன்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் வழங்கப்பட்டுவிட வேண்டும். ஆனால், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இந்தப் பணப்பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு நீண்ட காலமாகவே நிலவிவருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த பணப்பலன்களை வழங்க 2023இல் ரூ.1,030 கோடியை அரசு ஒதுக்கியது.