புத்தாண்டும் புதிய நம்பிக்கைகளும்
புத்தாண்டு என்பது மனித குலத்துக்குக் காலம் பரிசளிக்கும் கொடை. முந்தைய ஆண்டில் உலகம் எதிர்கொண்ட இன்னல்கள், சவால்கள் என எதிர்மறையான எல்லா அம்சங்களையும் கடந்து இழப்புகளை ஈடுகட்டும் நிகழ்வுகள், சிறப்பான எதிர்காலம், போர்களற்ற உலகம், சச்சரவுகள் அற்ற சமூகம் எனப் பல நம்பிக்கைகளுடன் எதிர்நோக்க வேண்டிய புதிய காலம் அது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உலுக்கிய கோவிட் கொடுங்காலத்தைக் கடந்து வந்துவிட்டாலும், அது முடிவுற்றுவந்த காலம் தொடங்கி இதுவரை லட்சக்கணக்கானோரைப் பலிகொண்ட உக்ரைன் போரும், 2023 அக்டோபரில் தொடங்கி இன்றுவரை 45,000க்கும் மேற்பட்டோரைக் கொன்றழித்த காஸா போரும் புத்தாண்டிலாவது முடிவுக்கு வருமா என சர்வதேசச் சமூகம் காத்திருக்கிறது. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சூடான் போன்ற ஆப்ரிக்க நாடுகளில் தீவிரமடைந்திருக்கும் உள்நாட்டுப் போர்களும் கவலையளிக்கின்றன.
