

சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் நடத்தியுள்ள போராட்டம், வாழ்வாதாரம் குறித்த அவர்களது அச்சத்தின் வெளிப்பாடு. கடற்கரையில் தங்கள் உரிமைகள் பறிபோகும் என்கிற அவர்களின் கவலை நியாயமானது.
மத்தியச் சுற்றுச்சூழல், வன அமைச்சகத்தின்கீழ் வரும் ஒருங்கிணைந்த கடற்கரை மேலாண்மை அமைப்பு, இந்தியாவில் உள்ள கடற்கரைகளைக் குறிப்பிட்ட தரநிலைகளை அளவுகோலாகக் கொண்டு ‘நீலக்கொடி கடற்கரை’யாக அங்கீகரித்துச் சான்றிதழ் அளித்து வருகிறது. டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளையின் வழிகாட்டலில் நடைபெறும் இப்பணியின்படி, கடற்கரையில் சுற்றுச்சூழல் கல்வி, தண்ணீரின் தரம், நிர்வாகம், பாதுகாப்பு ஆகியவை சார்ந்து 33 தரநிலைகளைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பூர்த்தி செய்ய வேண்டும்.